ரெயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை: நிறுவனம் முன்பு உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்


ரெயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை: நிறுவனம் முன்பு உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
x

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஊழியர் உடலை நிறுவனம் முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே உள்ள சிங்கிலிமேடு கிராமத்தில் வசிப்பவர் குமரன் (வயது 40). இவர் உத்தண்டுகண்டிகை பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் குமரனின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து குமரன் வேலை செய்து வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினர்கள் நிறுவனம் முன்பு உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story