மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 5 July 2023 1:15 AM IST (Updated: 5 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தொடங்கின. அந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

வாக்குப்பதிவு எந்திரங்கள்

அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, தேனி நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் 'விவிபேட்' கருவிகள் ஆகியவற்றை சரிபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.

சரிபார்ப்பு பணிகள்

அந்த அறையில் 2,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,754 கட்டுப்பாட்டு கருவிகள், 1,891 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கின. இதற்காக பெங்களூரு 'பெல்' நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 என்ஜினீயர்கள் குழுவினர் தேனிக்கு வந்துள்ளனர். அவர்கள் இந்த சரிபார்ப்பு பணியை தொடங்கினர்.

இந்த சரிபார்ப்பு பணியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சுகந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி பார்வையில் இந்த பணிகள் நடக்கின்றன. இதற்காக இந்த பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story