மின்வேலிகளில் யானைகள் சிக்கினால் மின்வாரியத்திற்கு அபராதம் - சென்னை ஐகோர்ட்டு
யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு தீவிரம் காட்டவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
சென்னை,
வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டின் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.
வழக்கு விசாரணையின் போது, யானைகள் உயிழப்பை தடுக்க உபகரணங்கள் கொள்முதல் செய்தும் டெண்டர் இறுதி செய்யப்படாதது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மின்சார வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடுமெனவும் ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.