பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வந்தார்.
மதுரை,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.
தொண்டர்களின் வரவேற்பு பெற்ற எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு சென்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.