அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்


அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தெற்குத்தெரு அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவ-மாணவியர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். சிகிச்சை பெற்றுவரும் மாணவச் செல்வங்கள் அனைவரும் உடல்நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

எனது அறிவுறுத்தலுக்கு இணங்க கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் நேரில் சென்று காயமடைந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதே போன்று இன்று திருவள்ளூர், சிறுவானூர் , கண்டிகை ஊராட்சி அரசு ஆரம்ப பள்ளியில் மரம் விழுந்து 5 மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது ,

மழைக் காலங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,பள்ளிகளிலாவது அக்கறையோடு எடுத்திருக்க வேண்டும்.

திமுக அரசு இனியாவது பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறும், காயமுற்ற மாணவ-மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story