கிழக்கு கடற்கரை சாலை உள்வாங்கியது
தில்லைவிளாகம் அருகே கிழக்கு கடற்கரை சாலை உள்வாங்கி காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையையொட்டி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. தமிழகத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளுள் கிழக்கு கடற்கரை சாலையும் ஒன்றாகும். தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் இணைப்பதற்கு கிழக்கு கடற்கரை சாலை உதவுகிறது.
சாலை உள்வாங்கியது
முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலை திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகே உள்ள ஆலங்காடு பகுதி வழியாக செல்கிறது. இதனால் ஆலங்காடு வழியாக திருத்துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி, நாகூர், பட்டுக்கோட்டை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் ஆலங்காடு கடைத்தெரு பகுதியில் உள்ள பாலம் பகுதியில் உள்வாங்கி காணப்படுகிறது.
சீரமைக்க கோரிக்கை
இந்த பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை உள்வாங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டி உள்ளது.
எனவே அந்த பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.