சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ. சுமந்து சென்ற மலைவாழ் மக்கள்


சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ. சுமந்து சென்ற மலைவாழ் மக்கள்
x
தினத்தந்தி 9 April 2024 10:22 AM IST (Updated: 9 April 2024 11:11 AM IST)
t-max-icont-min-icon

சுமார் 7 கிலோமீட்டர் கரடு, முரடான பாதையில் கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் சுமந்து சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் கரடு, முரடான பாதையில் சுமந்து சென்று எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மலைவாழ் மக்களின் நலன் கருதி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்தலை புறக்கணிக்க முடிவு

மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்து விட்டது.

எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லை யென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story