தேனி மாவட்டத்தில் கருத்தடை செய்யாததால் கட்டுக்கடங்காமல் பெருகிய தெருநாய்கள் எண்ணிக்கை: துரத்திக் கடிப்பதால் மக்கள் பாதிப்பு


தேனி மாவட்டத்தில் கருத்தடை செய்யாததால்  கட்டுக்கடங்காமல் பெருகிய தெருநாய்கள் எண்ணிக்கை:  துரத்திக் கடிப்பதால் மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கருத்தடை செய்யப்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. துரத்திக் கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தேனி


தெருநாய்கள் தொல்லை

தேனி மாவட்டத்தில் இரவு பணி முடித்து வீடு திரும்பும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் திருடர்களுக்கு பயப்படுகிறார்களோ, இல்லையோ! தெருநாய்களுக்கு பயந்து பயந்து வீடு திரும்பும் நிலைமை உள்ளது. தெருநாய்கள் தொல்லை காலம் காலமாக இருந்து வந்தாலும், சமீப காலமாக அவை மக்களை துரத்திக் கடிப்பதால் இந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தின் தலைநகரான தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை சுமார் 1 லட்சம் ஆகும். இந்த நகராட்சி பகுதியில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகின்றன. 40 நபர்களுக்கு ஒரு நாய் என்ற விகிதத்தில் எண்ணிக்கை பெருகி உள்ளன.

கருத்தடை சிகிச்சை

தேனி மட்டுமின்றி பழனிசெட்டிபட்டி, ரத்தினம் நகர், அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலும், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. இதற்கு முதன்மையான காரணம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பதே ஆகும்.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 300 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டன. போதிய நிதிநிலை இல்லாத காரணத்தால் அந்த பணி கைவிடப்பட்டது.

நாய் கடித்து 8 பேர் காயம்

கருத்தடை செய்யாததால் நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகளிலும், சாலையோர பகுதிகளிலும் உலா வரும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவைகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்படாமல் உள்ளதால் சில நேரங்களில் நாய்கள் வெறிபிடித்து மக்களை துரத்திக் கடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் கண்டமனூர் பகுதியில் தெருநாய் துரத்திக் கடித்தத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி நகரிலும், ரத்தினம் நகர், கம்பம். போடி. சின்னமனூர் பகுதியிலும் தெருநாய்கள் கடித்ததில் பலர் காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாய் கடித்து விட்டதாக தினமும் சிகிச்சைக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள் தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களுக்கான மருத்துவ செலவுகளையும், பராமரிப்பு செலவுகளையும் ஏற்க வேண்டும் என்றும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் பார்த்தால் தேனி நகரில் சாலையோர தள்ளுவண்டி கடைகளும், அவற்றில் இறைச்சியை சாப்பிட்டுவிட்டு எலும்புகளை வீசும் நபர்களும், குப்பைத் தொட்டிகளில் எச்சில் உணவுகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுபவர்கள் தான் தெருநாய்களுக்கு அதிக அளவில் உணவு அளிக்கும் நிலையில் உள்ளனர்.

இதுபோன்ற கடைகள், திறந்தவெளி மதுபான பார்களாக மாறும் இடங்களை சுற்றிலும் நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. இதனால் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக நாய்கள் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கி சிலர் உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன.

கட்டுப்படுத்த வேண்டும்

இதுதொடர்பாக சமீபத்தில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற்று வரும் கண்டமனூரை சேர்ந்த ராஜாத்தியம்மாள் கூறுகையில், "நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தபோது நாய் கடித்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். நாய் கடித்ததால் சில நாட்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டு வருவதால் வேலைக்கு சரியாக போக முடியாமல் வருமானம் இன்றி பாதிக்கப்படுகிறேன். என்னைப் போன்று கூலித் தொழிலாளர்கள் பலரும் இதுபோன்று நாய்களால் கடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.

நாய் கடியால் காயம்பட்ட கண்டமனூரை சேர்ந்த காமாட்சியம்மாள் கூறுகையில், "எங்கள் ஊரில் வெறி பிடித்து சுற்றிய நாய் என்னையும், சிலரையும் கடித்து விட்டது. ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த எனக்கு இப்போது நாய் கடியால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு நாய்களுக்கு தடுப்பூசிகள் போடுவது போல், தெருநாய்களுக்கும் அதிகாரிகள் தடுப்பூசி போட முன்வர வேண்டும்" என்றார்.

நிதி உயர்வு

கம்பத்தை சேர்ந்த ஜெயபாலன் கூறுகையில், "மாவட்டத்தில் பல இடங்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. கம்பம் பகுதியிலும் தெருநாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. இரவில் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்துகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் நாய்கள் குறுக்கே ஓடுவதால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.

அளவான எண்ணிக்கையில் தெருநாய்கள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், கருத்தடை செய்யப்படாததால் அளவுக்கு அதிகமான நாய்கள் பெருகி உள்ளன. இதனால் இது சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது" என்றார்.

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் உள்ளது குறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்டபோது, "நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு முதலில் அவற்றை ஆட்கள் வைத்து பிடித்து வர வேண்டும். கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஒரு வார காலம் அவற்றை காப்பகத்தில் வைத்து பராமரித்து காயங்கள் ஆறிய பின்னரே தெருக்களில் விட வேண்டும்.

இந்த பணிக்கு ஒரு நாய்க்கு ரூ.700 வீதம் அரசு நிதி கொடுத்தது. இது போதுமான நிதியாக இல்லாததால் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் அவற்றை பராமரிப்பு செய்வதில் சில பிரச்சினைகள் இருந்தன. தற்போது இந்த நிதியானது அறுவை சிகிச்சைக்கு ரூ.1,400, அவற்றை பிடித்து வர ரூ.250 என உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் உயர்த்தப்பட்ட நிதி நடைமுறைக்கு வந்து விடும். அதன்பிறகு முழு வீச்சில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்" என்றார்.


Related Tags :
Next Story