மதுபோதையில் தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை -உறவினர் கைது
சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் வெளியூரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இங்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த குட்டி என்கிற ராஜேந்திரன் (வயது 33), செஞ்சியை சேர்ந்த அவரது உறவினர் சுகுமார் (38) ஆகியோரும் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 22-ந்தேதி அன்று இரவு கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார்கள். மது போதை தலைக்கேறியதும் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
அப்போது சுகுமார், ராஜேந்திரனை பிடித்து கீழே தள்ளி, உருட்டுக்கட்டையால் பலமாக தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், சுகுமார் அங்கிருந்து தப்பியோடி ஓடி விட்டார்.
உறவினர் கைது
இதுகுறித்து தகவலறிந்து ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அவரது உறவினர் சுகுமாரை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து அவரது சொந்த ஊரான செஞ்சியில் வைத்து தனிப்படை போலீசார் சுகுமாரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.