போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் வழக்கை கையிலெடுத்த என்.ஐ.ஏ.


போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் வழக்கை கையிலெடுத்த என்.ஐ.ஏ.
x
தினத்தந்தி 13 March 2024 4:17 PM IST (Updated: 18 March 2024 9:40 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டவுடன் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ 'சூடோபெட்ரின்' என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்குக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. அவர் தலைமறைவானார். அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வழக்கு ஆவணங்களை டெல்லி என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ. கோரியுள்ளது. ஏற்கெனவே அமலாக்கத்துறையும் வழக்கை விசாரிக்கும் நிலையில் என்.ஐ.ஏ.யும் விவரங்களை கேட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story