சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2022 7:08 PM GMT (Updated: 12 Aug 2022 7:22 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

எத்தியோப்பியாவிலிருந்து சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் கோகைன் என்ற போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வாலிபர் ஒருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு எத்தியோப்பியாவிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பெருமளவிலான கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தபோது, எத்தியோப்பியாவிற்கு சுற்றுலா சென்று விட்டு சென்னை திரும்பிய இக்பால் பாஷா (வயது 35) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

அவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது கைப்பை மற்றும் செருப்புகளில் வைத்து கடத்தி வரப்பட்ட கோகைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் எடையுள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். ரூ.100 கோடி அளவிற்கு சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருட்கள் பிடிபட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக இக்பால் பாஷாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்றும் இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்னால் எத்தியோப்பியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story