தமிழ்நாட்டில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2023 10:27 AM IST (Updated: 8 Oct 2023 10:46 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் தமிழ்நாட்டில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

'பருவத்தே பயிர் செய்' என்னும் பழமொழி செய்ய வேண்டிய காலத்தே ஒருசெயலை செய்து முடிக்க வேண்டும் என்ற கருத்தினை நமக்கு உணர்த்துகிறது. இந்த பழமொழிக்கேற்ப வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, வடிகால்களில் தேங்கியிருக்கும் குப்பைகள், கழிவுப் பொருட்கள், வண்டல் மண் போன்றவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே மழை தண்ணீர் தெருக்களில் தேங்காமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வடிகால் தூரெடுப்புப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறான சூழ்நிலை சென்னை புறநகர்ப் பகுதிகளில் நிலவுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வடிகால் தூரெடுப்புப் பணிகளுக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், 50 விழுக்காடு பணிகள் கூட இன்னமும் முடிவடையாத சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 785 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 386 கிலோ மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 6,930 வாய்க்கால் பாலங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்கிற்கு மாறாக 2,130 வாய்க்கால் பாலங்கள் மட்டுமே தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், கணிசமான பகுதிகளில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும், பல்லாவரம், சேலையூர், சிட்லப்பாக்கம், செம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள வடிகால்கள் அனைத்திலும், குப்பைகள், கழிவுப் பொருட்கள், மண் துகள்கள் ஆகியவை தேங்கியுள்ளன என்றும் கூறப்படுகிறது. இதே நிலைமைதான் பம்மல், அனகாபத்தூர், பொழிச்சலூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவுகிறது.

வடிகால் தூரெடுப்பு குறித்து கேள்விப்படுகிறோமே தவிர, களத்தில் ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, மழை நீர் சுதந்திரமாக ஓடாமல் ஆங்காங்கே குளம்போல் தேங்கி டெங்கு போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும். மேலும், நீர் மாசுபடுவதற்குரிய சூழ்நிலையும் உருவாக்கும். சென்னை புறநகர் பகுதிகளை பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதிகளாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், ஐம்பது விழுக்காடு தூரெடுப்புப் பணிகள்கூட முடிவடையாதது தி.மு.க. அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், சென்னைப் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தூர்வாரும் பணிகள் இன்னும் முடியவில்லையோ அங்கெல்லாம் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கையினை எடுத்து மக்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story