நாடாளுமன்ற குழு தலைவர் யார்? மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. புதிய எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதில் தி.மு.க. சார்பில் களம் இறங்கிய டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கனிமொழி (தூத்துக்குடி), ஆ.ராசா (நீலகிரி), தயாநிதிமாறன் (மத்தியசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), டாக்டர் கலாநிதி வீராசாமி (வடசென்னை), செல்வம் (காஞ்சீபுரம்), கதிர் ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), டி.எம்.செல்வகணபதி (சேலம்), ஆ.மணி (தர்மபுரி), தரணிவேந்தன் (ஆரணி), மலையரசன் (கள்ளக்குறிச்சி), பிரகாஷ் (ஈரோடு), கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), அருண் நேரு (பெரம்பலூர்), முரசொலி (தஞ்சை), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (தென்காசி) ஆகிய 21 வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள்.
இதில் கடைசி 10 பேர் நாடாளுமன்றத்துக்கு முதல்முறை எம்.பி.யாக செல்ல உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் 21 பேரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் சந்தித்து, வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இதற்கிடையே தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. புதிய எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குழு தலைவர் யார்?
இந்த கூட்டத்தில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர், பொருளாளர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா ஆகியோர் ஏற்கனவே இருந்துள்ளனர்.
எனவே மீண்டும் அவர்களே இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாளர் பதவியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இருந்து வந்தார். இந்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே பொருளாளர் பதவிக்கான பரிசீலனையில் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது.