அமைச்சர் சிவசங்கரின் காரை மறித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்


அமைச்சர் சிவசங்கரின் காரை மறித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்
x

நெய்வேலி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் அந்த வழியாக வந்த அமைச்சா் சிவசங்கரின் காரை வழிமறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கம்மாபுரம்

சுங்கச்சாவடி முற்றுகை

சுங்கக்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நெய்வேலி அருகே ஊ.மங்கலத்தில் மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் ஆகியோர் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஒன்று திரண்டு பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகில் வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

பின்னர் அவர்கள் அங்கிருந்து கட்சி கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு கோஷம் எழுப்பியபடி சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அந்த நேரத்தில் கடலூருக்கு அந்த வழியாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் கார் வந்தது. இதை பார்த்த தே.மு.தி.க.வினர் திடீரென அமைச்சர் சிவசங்கரின் காரை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் அமைச்சர் சிவசங்கர் அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டு சென்றார்.

200 பேர் கைது

இதையடுத்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றதாக கூறி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அவைத்தலைவர்கள் ராஜாராம், பாலு, பொருளாளர் ஏ.பி.ராஜ், ஒன்றிய செயலாளர்கள் பொன்தனசேகர், விருத்தாசலம் நகர செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், செம்பை, வடக்கு மாவட்ட துணைசெயலாளர் வேல்முருகன், நகர துணை செயலாளர் கெஜலட்சுமி இளங்கோவன், நகர நிர்வாகி சக்கரபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story