பாஜக மீது திமுகவுக்கு பயம் வந்துவிட்டது - கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி
சமூக வலைத்தளங்களில் பொய்யை பரப்புவது திமுகதான் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அந்த தேர்தலை முன்னிறுத்தி தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த யாத்திரையின் 2 கட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்து உள்ளன.
குன்னூரில் நேற்று தனது 2-ம் கட்ட யாத்திரையை முடித்துக் கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 3-ம் கட்ட யாத்திரையை 4-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்க இருக்கிறார். இந்த நிலையில், அண்ணாமலை இன்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருக்கிறார். இதுதவிர மேலும் சில முக்கிய தலைவர்களையும் சந்திக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்கு முன்பாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். தூய்மை பாரதம் திட்டத்தை தமிழக அரசு தனது திட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும்; பாஜக திட்டமாக பார்க்கக் கூடாது. யாத்திரை தொடர்பாக விளக்கமளிக்கவே டெல்லி செல்கிறேன்.
கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம்; கூட்டணி பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். தேசத்தில் ஊழலற்ற ஒரே கட்சி பாஜக என்பதால்தான் பலருக்கும் வெறுப்பு. சமூக வலைத்தளங்களில் பொய்யை பரப்புவது திமுகதான். பாஜக மீது திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.
அதிமுக தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது. நான் பதவிக்காக வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கி எறிந்துவிட்டு வந்தவன். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. டெல்லிக்கு செல்வதால் என்ன நடந்துவிடப் போகிறது. நான் ஒரே மாதிரிதான் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.