தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு


தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
x
தினத்தந்தி 28 March 2024 6:27 PM IST (Updated: 28 March 2024 6:27 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொகுதியில் உள்ள வாக்குரிமையை நீக்குவதற்கான படிவம் ஏற்கனவே வழங்கி விட்டதாகவும், நீக்காததற்கு வேட்பாளர் பொறுப்பாகாக மாட்டார் எனவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

சேலம்,

தமிழகத்தில் உள்ள 39-நாடாளுமன்ற தொகுதிகளில் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 37 பேர் மனு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனுவை அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்தனர். அப்போது அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு வடக்கு மற்றும் மேற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 2 இடங்களில் வாக்குரிமை உள்ளது, வேட்புமனுவில் ஏற்கனவே 2 வழக்குகளில் தண்டனை பெற்று விடுதலையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை உள்ளிட்ட சில புகார்களை கூறினர். இதையடுத்து டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனுவை மதியம் 2 மணி வரை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மற்றவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதையடுத்து 2 மணிக்கு மீண்டும் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அப்போது அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு தி.மு.க. வேட்பாளர் சார்பில் வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.

மேற்கு தொகுதியில் உள்ள வாக்குரிமையை நீக்குவதற்கான படிவம் ஏற்கனவே வழங்கி விட்டதாகவும், நீக்காததற்கு வேட்பாளர் பொறுப்பாகாக மாட்டார் எனவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கொடுத்த புகார் மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். இதையடுத்து நீண்ட இழுப்பறிக்கு பிறகு தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் மனுவை அதிகாரிகள் ஏற்று கொண்டனர். அதன்பிறகே தி.மு.க. நிர்வாகிகள் நிம்மதி அடைந்தனர்.


Next Story