காஞ்சீபுரம் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் வெற்றி


காஞ்சீபுரம் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் வெற்றி
x

காஞ்சீபுரம் மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

காஞ்சிபுரம்

வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்

வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு தலைவராக மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். இந்த நிலையில் 9 பேர் கொண்ட உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர், ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி வரிவிதிப்பு மேல் முறையிட்டு குழு உறுப்பினர் பதவிக்கு மாநகராட்சி உறுப்பினர்கள் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி உறுப்பினர்கள் 51 பேரில் மேயர், துணை மேயர் உள்பட 36 பேர் தி.மு.க. கூட்டணியில் உள்ளனர். எதிர்கட்சி வரிசையில் அ.தி.மு.க., பா.ஜ.க. த.மா.கா. பா.ம.க.வை சேர்ந்த 15 பேர் மாநகராட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டுகளில் மக்கள் நல பணிகளை சரியாக செய்ய விடுவதில்லை என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பும் போது மேயர் பதிலளிக்காமல் தட்டி கழித்து வருவதாக கூறி தேர்தலை புறக்கணித்து பதாகைகளை கைகளில் ஏந்தி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.க. கூட்டணி கட்சியினர்

எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷங்கள் எழுப்பியதால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சி உறுப்பினர்கள் அஸ்மா பேகம், கமலக்கண்ணன், கார்த்திக், குமரகுருநாதன், கவுதமி, சங்கர், சோபனா, பானுப்ரியா சிலம்பரசு, சர்மிளா ஆகிய 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் நடத்தப்பட்டு தி.மு.க. கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.


Next Story