தீபாவளியையொட்டி, விழுப்புரம் பஸ்நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் பரிதவிப்பு


தீபாவளியையொட்டி, விழுப்புரம் பஸ்நிலையத்தில் இருந்து    தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

விழுப்புரம் பஸ்நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்காததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

விழுப்புரம்


தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவர்களுக்காக அரசு போக்குவரத்து துறையும் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.அந்த வகையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் உள்ள விழுப்புரம் பஸ்நிலையம் முக்கியம் இடம் வகிக்கிறது. இதனால் இங்கு நேற்று பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். ஆனால் தென்மாவட்டங்களுக்கு பெரிய அளவில் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பஸ் வசதி இல்லை

இந்நிலையில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்த மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பஸ்நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து நம்மிடையே கூறியதாவது:-

நான் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தற்போது தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்ல புதுச்சேரியிலேயே வெகு நேரம் காத்திருந்தேன். ஆனால் மதுரைக்கு நேரடியாக செல்லக்கூடிய பஸ் இல்லை. இதனால் அங்கிருந்து ஒரு பஸ்சில் புறப்பட்டு விழுப்புரம் வந்து இறங்கினேன். இங்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுரை செல்ல பஸ்சிற்காக காத்து நிற்கிறேன்.

ஆனால் இதுவரையிலும் எந்தவொரு பஸ்சும் வரவில்லை. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக்கு மட்டும் 200 பஸ்களோ, 300 பஸ்களோ இயக்குவதாக அரசு அறிவித்திருந்தது. அந்த பஸ்கள் எல்லாம் எங்கே சென்றன, என்னவாயிற்று என்று தெரியவில்லை. அரசு அறிவிக்கும் இதுபோன்ற அறிவிப்புகள் எல்லாம் பெருமைக்குதானா? விழுப்புரத்திலிருந்து திருச்சி, சென்னைக்கு அடிக்கடி பஸ் வசதி இருக்கிறது. ஆனால் மதுரை, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களுக்கு அடிக்கடி பஸ் வசதி இல்லை.

இதனால் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லை, இங்கு இருக்கிற கழிவறையும் ரொம்ப மோசம், பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மிகவும் முக்கிய பஸ் நிலையமாக கருதப்படும் விழுப்புரம் பஸ் நிலையம் இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கடும் துர்நாற்றமாக வீசுகிறது என்றார்.

நிற்பதற்கு கூட இடமில்லை

சேலம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், நான் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வருகிறேன். தற்போது தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சேலம் பஸ்சுக்காக 1:30 மணி நேரமாக காத்திருக்கிறேன். வெகு நேரம் கழித்து ஒரே ஒரு பஸ் மட்டும் வந்தது. அந்த பஸ்சிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் நிரம்பி இருந்ததால் நிற்பதற்கு கூட இடமில்லை.

முன்பெல்லாம் சாதாரண நாட்களில் 5 நிமிடம், 10 நிமிடத்திற்கு ஒருமுறை சேலத்திற்கு அடிக்கடி பஸ் இருக்கும். ஆனால் மிகவும் முக்கியமான நேரமான பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு சென்றுவர போதிய பஸ்கள் இல்லாததால் சிரமமாக இருக்கிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் சமயத்தில் உட்காருவதற்கு கூட இருக்கை வசதி இல்லை. எவ்வளவு நேரம்தான் நின்றுகொண்டே பஸ்சுக்காக காத்திருப்பது, இங்கு சுத்தம், சுகாதாரம் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பயணிகளின் அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் பெரிதாக செய்து தரப்படவில்லை என்றார் அவர்.


Next Story