மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது


மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது
x

மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் இருப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்கு பணிக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

சென்னை,

சென்னையில் 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 3 வழித்தடங்களில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. அதாவது 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூத்திற்கும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் 3-வது வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. அதேபோல் 4-வது வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 18-ம், சுரங்கத்தில் 12 ரெயில் நிலையங்கள் வருகிறது. 5-வது வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 42-ம், சுரங்கப்பாதையில் 6 ரெயில் நிலையங்கள் வர உள்ளன.

போரூரில் உயர்த்தப்பட்ட பாதை

3-வது வழித்தடத்தில் உள்ள மாதவரம் பால்பண்ணையில் இருந்து 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்களும், கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு நோக்கி ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரமும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. அதேபோல் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலையில் போரூர் பகுதியில் உயர்த்தப்பட்ட பாதைக்கான பணிகள் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வருகிறது.

வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த பாதையில் ரெயிலை இயக்குவதற்காக திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இந்த பாதையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கலங்கரை விளக்கத்தில் இருந்து மயிலாப்பூர் நோக்கி சுரங்கம் தோண்டும் எந்திரம் வருகிற ஜூன் மாதம் பணியை தொடங்க இருக்கிறது. இதற்காக பூமியின் கீழ் உள்ள கேபிள்கள், குழாய்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

மெரினா கடற்கரை காந்தி சிலை

அதேபோல் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் 62 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காந்தி சிலை இருக்கும் பகுதியில் சுரங்க ரெயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணியின் போது சேதம் அடையாமல் இருப்பதற்காக காந்தி சிலையை மாநரில் உள்ள மாநகராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைத்து விட்டு பணி முடிந்த உடன் மீண்டும் மெரினா கடற்கரையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது காந்தி சிலை இருக்கும் பகுதியில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் பணிக்கு எந்த வித இடையூறும் இல்லாத வகையில் இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைக்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.


Next Story