மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு: விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - 4 மணி நேரம் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் அவதி


மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு: விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - 4 மணி நேரம் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் அவதி
x

திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில் மின்சார வினியோகத்தில் கோளாறு ஏற்பட்டதால் 4 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை

சென்னையில் 55 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2 வழிப்பாதையில் காலை 5 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரெயில் சேவை மூலம் தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர். குறிப்பாக, சென்னை விமான நிலையம் முதல் திருவொற்றியூர் அடுத்துள்ள விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த பாதையில் நேற்று காலை 5.45 மணி அளவில் விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையே மின்சார வினியோகத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் விம்கோ நகரில் இருந்து விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையம் வரையில் ஒருவழிப்பாதை மெட்ரோ ரெயில் சேவை தான் இருந்தது. இதனால், விம்கோ நகர் வரை 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதனால் வடசென்னை பகுதியில் இருந்து சென்டிரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மின்சார வினியோக பிரச்சினையை சரிசெய்யும் பணிகளில் மெட்ரோ நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி காலை 9.30 மணி அளவில் நிறைவடைந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் நேற்று சேவை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து வழக்கம் போல் சேவை தொடர்ந்தது என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story