ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஓபிஎஸ்
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. பொருளாதாரம் உயரும் வரை சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. வழிகாட்டி மதிப்பு நியாயமாக நிர்ணயிக்கப்படும் என்று கூறி, அதனை உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி.
இந்த வரிசையில், கூடுதலாக ஒரு கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் பொருட்களை நிறுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மொத்தத்தில், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூடுதலாக உளுத்தம் பருப்பும், சர்க்கரையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலம் கடந்தும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
மாறாக, துவரம் பருப்பிற்கு பதிலாக மஞ்சள் பருப்பு வழங்குவதும் மற்றும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கப்படாத சூழ்நிலையும் நிலவி வந்தது. தற்போது,, இதனையும் நிறுத்தப் போவதாக செய்தி வந்துள்ளது. இதற்குக் காரணம் கடும் நிதி நெருக்கடி என்று கூறப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசால் விதிக்கப்படும் அனைத்து வரிகளும், கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன. கடனும் அதிகமாக வாங்கப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டு மட்டும் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் சேர்த்து தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் 7 இலட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய். அனைத்து வரிகளையும் உயர்த்தியும், கூடுதலாக கடனை வாங்கியும், அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல பல மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பல சலுகைகளை நிறுத்தியும் கடும் நிதி நெருக்கடி என்று தி.மு.க. அரசு தெரிவிக்கிறது என்றால், நிர்வாகத் திறமையற்ற அரசு என்று தி.மு.க. அரசே ஒப்புக் கொள்கிறது என்றுதான் பொருள்.
நிதி மேலாண்மையில் தி.மு.க. அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. தி.மு.க. அரசின் போக்கினைப் பார்க்கும்போது 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்ற பழமொழிதான் பொதுமக்களின் நினைவிற்கு வருகிறது. நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இருக்கின்ற சலுகைகளை பறிப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடி கவனம் செலுத்தி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும், கூடுதலாக உளுத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்ற வாக்குறுதியினை நிறைவேற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.