அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடக்கம்
அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 28 ஆயிரத்து 865 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா அடங்கல், பட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றின் 2 பிரதிகளோடு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.