திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

இதனையொட்டி இன்று காலை பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் பிரதான தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூத்தேர் ஊர்வலம் காலை கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி மேற்கு ரத வீதி, அரசமர சந்து, பழனி சாலை, கோபாலசமுத்திர குளத்தின் மேற்கு கரை, சத்திரம் தெரு, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது.

இந்த பூத்தேரை வழிநெடுகிலும் பொதுமக்கள் பூத்தூவி வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள், கூடை கூடையாக மலர்களை காணிக்கையாக செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்பினர் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த பூத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக குறைந்த பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், இன்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Next Story