திதி, தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
மகாளய அமாவாசையையொட்டி வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.
திருப்புவனம்,
மகாளய அமாவாசை
திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திதி, தர்ப்பணம் செய்வது காசியை போன்று விசேஷமானது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள்.
இதே போல் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிவகங்கை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான மக்கள் குவிந்து விடுவார்கள்.
திதி, தர்ப்பணம்
இந்த நிலையில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி அதிகாலை முதலே மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக திருப்புவனம் வைகை ஆற்றுக்கு வந்தனர். முன்னதாக மக்களின் வசதிக்காக வைகை ஆற்றில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் வைகை ஆற்றின் உள்பகுதியில் உள்ள பந்தலில் நீளமாக அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
பிறகு பொதுமக்கள் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வைகை ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
சாமி தரிசனம்
அதேபோல் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு நேற்று மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் திதி, தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.