"தர்மம் என்றும் நிலைத்து நிற்கும்" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தர்மம் என்றும் நிலைத்து நிற்கும் என ஐகோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது எனவும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. பொதுக்குழு நடத்தவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனவும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பார்கள். இப்போது தர்மம் வென்றிருக்கிறது. ஆகவே தர்மம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நாளைய நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். பொதுக்குழுவுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. ஆகவே பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு பிறகு மீண்டும் நம்முடைய இயக்கம் எதிர்காலத்தில் வருகின்ற தேர்தலில் அனைத்திலும் வெற்றி பெறும் என்பது தான் தீர்ப்பின் எடுத்துக்காட்டு!! தர்மம் வென்றிருக்கிறது!!!"
இவ்வாறு அவர் கூறினார்.