திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக போற்றப்படுவது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
தற்போது இக்கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் பொட்டலங்களை குரங்கள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது. சமீப நாட்களாக கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து முருகன் கோவில் நிர்வாகம் கோவிலில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறைனரிடம் அனுமதி கோரியது. திருத்தணி வனசரகர் தலைமையில் வன ஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட குரங்குகளை ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து குரங்குகளை பிடிக்கும் பணி நடைபெறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.