செல்பி மோகத்தால் விபரீதம்: கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்


செல்பி மோகத்தால் விபரீதம்: கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்
x

கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை டிரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

திருவள்ளூர்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீரின் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றிற்க்கு திறந்து விட்டனர். எனவே, கொசஸ்தலை ஆற்றங்கரையில் வசிக்கும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீஸ் துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார் (வயது 20) என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்றார். அங்கு நவீன்குமார் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென கொசத்தலை ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். செய்வது அறியாது திகைத்த அவரது நண்பர்கள் கூக்குறல் ஈட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் வெங்கல் போலீஸ் நிலைய போலிசாரும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி டிரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் மூலம் தேடி வருகின்றனர். ஆனால் இன்னும் நவீன் குமாரை கண்டுபிடிக்காததால் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story