பொலிவிழந்த ரெயில் நிலைய பூங்கா
ஊட்டியில் ரெயில் நிலைய பூங்கா மீண்டும் பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் புத்துயிர் பெறுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டியில் ரெயில் நிலைய பூங்கா மீண்டும் பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் புத்துயிர் பெறுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மலைரெயில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊட்டியில் கடந்த 1908-ம் ஆண்டு ரெயில் நிலையம் உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில் யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலைரெயிலை அறிவித்த பிறகு, அதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
அவர்கள் இயற்கை எழில் சூழலை கண்டு ரசித்தபடி 208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் செல்லும் மலைரெயிலில் பயணித்து மகிழ்கின்றனர்.
பூங்கா
இந்த நிலையில் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தெற்கு ரெயில்வே சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்கா ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததால், ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் கூட சுழற்கோப்பைகளை வென்று உள்ளது.
இதற்கிடையில் கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு பூங்கா பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டது. மேலும் அங்கு கேண்டீன் அமைத்து, பூங்காவை அகற்ற ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
புதர் செடிகள் வளர்ந்து...
அதன்பிறகு கடந்த மே மாதம் ஊட்டி ரெயில் நிலைய பூங்கா சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு, நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் பூங்கா சுவர், ரெயில் நிலைய சுவர் வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தப்பட்டது.
இதன் மூலம் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த போட்டியில், சிறப்பாக பராமரிக்கப்படும் நடுத்தர பொது பூங்கா பிரிவில் தேர்வானது.
ஆனால் கடந்த 4 மாதங்களாக அந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பொலிவற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. அங்கு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது.
புத்துயிர் கொடுக்க வேண்டும்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கோடை சீசனின்போது ஊட்டி ரெயில் நிலைய பூங்கா பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. அங்கு பூத்துக்குலுங்கிய பூக்கள், தண்ணீரை பீய்ச்சியடித்த நீரூற்றுகள் அனைவரையும் கவந்தது.ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. இதை பார்ப்பதற்கே வேதனையாக உள்ளது.
தற்போது மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. எனவே ஊட்டி ரெயில் நிலைய பூங்காவையும் சீரமைத்து, மீண்டும் புத்துயிர் கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.