161 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிப்பு


161 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிப்பு
x

161 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பழமையான தேவாலயம்

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1861-ம் ஆண்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது. சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த தேவாலயம் 8,800 சதுர பரப்பளவில் கட்டப்பட்டது. அப்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேவாலயம் கட்டப்பட்டது.

கும்பகோணம் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இந்த தேவாலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பழமையான இந்த தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் தான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமின்றி, துறையூர் பகுதி தேவாலயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

மேற்கூரை இடிந்து விழுந்தது

இத்தகைய பழமை வாய்ந்த தேவாலயத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அதன் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த தேவாலயம் மூடப்பட்டு, அதற்கு சொந்தமான பள்ளியிலும், மண்டபத்திலும் பிரார்த்தனை நடைபெற்று வந்தது.

பின்னர் அந்த தேவாலயம் அருகே கடந்த 2016-ம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு சிலை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இடித்து அகற்றும் பணி

ஆனால் பழைய தேவாலயம் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேவாலயத்திற்கு சொந்தமான பள்ளியை ஆய்வு செய்ய வந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், புதிய தேவாலயம் பயன்பாட்டில் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், மக்கள் நலன் கருதியும் பழைய தேவாலயத்தை இடித்து அப்புறப்படுத்த தேவாலய பங்குத்தந்தையை அறிவுறுத்தினர். இதையடுத்து பங்குத்தந்தை உத்தரவின்பேரில் 161 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.


Next Story