நாளை மறுநாள்சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு6,800 பேர் எழுத உள்ளனர்
கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 6,800 பேர் எழுத உள்ளனர்.
750 பணியிடங்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு காவல்துறையில் உள்ள 750 காலி பணியிடங்களுக்கான நேரடி சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை) பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 6,800 பேர் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் வில்வநகர் கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி, கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது எழுத்து தேர்வு நடைபெறும். இந்த தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் அன்று மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழ் மொழிக்கான தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு நுழைவு சீட்டு கொண்டு வரவேண்டும். மேலும் தேர்வு எழுதவரும் தேர்வர்கள் அனைவரும் பந்துமுனை பேனா கொண்டுவர வேண்டும். இதை தவிர கைப்பை, செல்போன், புளுடூத் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தேர்வு மையங்களுக்குள் கொண்டுவரக் கூடாது.
மேற்கண்ட தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.