நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
தை, ஆடி அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்க மறந்தவர்கள் கூட மகாளய அமாவாசையில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
தாமிரபரணி ஆற்றில்..
நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி நெல்லை குறுக்குத்துறை படித்துறை, சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறை, ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
நெல்லை அருகன்குளம் ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள பழைய ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவிலில் உள்ள கல் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ஜடாயு தீர்த்தம், லட்சுமி நாராயணர் கோவிலிலும் வழிபாடு செய்தனர். சாலைகுமாரசாமி கோவில் முன்பு கிருஷ்ணகுமார் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாபநாசம்
இதேபோல் பாபநாசம் படித்துறையிலும் மூதாதையர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் இருந்தது.