சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை 16-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது


சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை 16-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது
x

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருகிற 16-ந்தேதி முதல் தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.

சென்னை

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு நகருக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே தமிழர்கள் அதிக அளவு வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டில் இருந்து சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டபோது, சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் தொடங்கியது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தினசரி விமான சேவையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story