வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்


வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
x

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் 1-ந்தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.203 உயர்த்தி உள்ளன.

அதன்படி சென்னையில் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத ஜி.எஸ்.டி. - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்."

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story