மிக்ஜம் புயல் எதிரொலி: இன்று 24 ரெயில்கள் ரத்து
தொடர் கனமழை காரணமாக கொருக்குப்பேட்டை, ஆவடி உள்பட பல்வேறு முக்கியமான ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.
சென்னை,
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. 'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
நேற்று சென்னை சென்டிரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம், கொருக்குப்பேட்டை, ஆவடி உள்பட பல்வேறு முக்கியமான ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால் சென்னை புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் மழைநீர் சூழ்ந்து தண்டவாளங்கள் ழுழுவதும் நீரில் மூழ்கியதால் மின்சார ரெயில்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது.
இந்நிலையில் மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 24 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எழும்பூரிலிருந்து செல்லும் மங்களூரு, திருச்சி, சேலம் உள்ளிட்ட விரைவு ரெயில்கள், சென்னை செட்டிரலில் இருந்து செல்லும் மைசூரு வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.