விண்டோஸ் கம்ப்யூட்டர்களை ஆட்டம் காண வைத்த கிரவுட்ஸ்டிரைக் அப்டேட்


விண்டோஸ் கம்ப்யூட்டர்களை ஆட்டம் காண வைத்த கிரவுட்ஸ்டிரைக் அப்டேட்
x

கிரவுட்ஸ்டிரைக் என்பது பயனர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தீர்வுகளை வழங்கக்கூடிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆகும்.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் எரர் (Blue Screen of Death) காண்பித்தது. அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கம்ப்யூட்டரில் ஆட்டோ அப்டேட் வைத்திருந்தவர்கள்தான் முதலில் இந்த பாதிப்பை சந்தித்தனர். இந்த சிலருக்கு கம்ப்யூட்டர்கள் திரும்பத் திரும்ப ரீஸ்டார்ட் ஆகின. எனினும் புளூ ஸ்கிரீன் பாதிப்பு சரியாகவில்லை.

விண்டோஸ் செயலிழந்ததால், விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என உலகம் முழுவதும் முக்கியமான துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. சில விமான நிறுவனங்கள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. குறிப்பாக ஐ.டி. நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால் அவர்கள் பணி செய்ய முடியாமல் தவித்தனர்.

விண்டோஸ் கம்ப்யூட்டர்களை ஆட்டம் காண வைத்துள்ள இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு, கிரவுட்ஸ்டிரைக் (Crowdstrike)சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

கிரவுட்ஸ்டிரைக் என்றால் என்ன?

கிரவுட்ஸ்டிரைக் என்பது பயனர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தீர்வுகளை வழங்கக்கூடிய இணைய பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனம் ஆகும். விண்டோஸ் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பிற்காக பால்கன் எனப்படும் சென்சார் அடிப்படையிலான முக்கிய சாப்ட்வேரை கிரவுட்ஸ்டிரைக் உருவாக்கி உள்ளது. ஆனால் அப்டேட் செய்தபோது பால்கன் சென்சார் செயலிழந்து, விண்டோசுடன் முரண்படுவதால் புளூ ஸ்கிரீன் எரர் தோன்றி உள்ளது.

கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த சிக்கலை விரைவில் சரிசெய்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பால்கனில் உள்ள கோளாறு கண்டறியப்பட்டதால், விண்டோஸ் பயனர்கள் தனியாக புகார் எதுவும் தெரிவிக்க தேவையில்லை என்றும், கோளாறு சரி செய்யப்பட்டதும் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

புளூ ஸ்கிரீன் எரர் ஏற்பட்டு கிட்டத்தட்ட 5 மணி நேரமாகியும் சரி செய்யப்படாததால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.


Next Story