வேலூர் கோட்டையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்


வேலூர் கோட்டையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்
x

ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்

கோவிலில் சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு வந்திருந்தனர்.

வழக்கமாக ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மதியம் 1 முதல் பிற்பகல் 3 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். ஆனால் ஏராளமான பக்தர்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்து நின்றதால் நடை சாத்தப்படவில்லை. பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் வரிசையாக செல்லவும் கோவில் முன்பாக சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார், கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். கோட்டை நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

புத்தாண்டு விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வேலூர் கோட்டைக்கு வருகை தந்தனர். அதனால் கோட்டையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நுழைவு வாயில் பகுதி முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக காணப்பட்டது. கோட்டை மதில்சுவர் மீது சுற்றுலா பயணிகள் சென்று அகழியை கண்டு ரசித்தனர்.

மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியத்துக்கு பலர் சென்று பார்வையிட்டனர். கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அமர்ந்து பொழுதுபோக்கினர்.

காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் நுழைவு வாயில் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வெளியே இருந்து வரும் வாகனங்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து வெளியே செல்லவும் முடியாதபடி நெரிசல் காணப்பட்டது.

வாகனங்களுக்கு தடை

அதனால் மதியம் 12 மணிக்கு மேல் கார், ஆட்டோ, வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அண்ணாசாலையோரம் மக்கான் சிக்னல் பகுதிவரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கடைகளில் பொம்மைகள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பனை களை கட்டியது.

1 More update

Next Story