லியோ படக்குழுவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை இடம் பெறச்செய்த காரணத்துக்காக லியோ படக்குழுவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
மதுரை,
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
இந்த படத்தில், வன்முறை, சட்ட விரோத செயல்கள், கார், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீசாரின் உதவி இருந்தால் போதும் அனைத்து குற்றங்களையும் செய்ய முடியும் என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை இடம் பெறச்செய்த காரணத்துக்காக லியோ படக்குழுவினர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.