பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு


பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
x

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

தூத்துக்குடி வி.இ.ரோட்டைச் சேர்ந்தவர் சிவகுமார். வியாபாரியான இவருடைய மகள் சுகிர்தா (வயது 27) குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் மருத்துவம் 2 -ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் குலசேகரம் போலீசார் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் (63), சீனியர் மாணவர் ஹரீஸ், மாணவி பிரீத்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த கடிதத்தில், பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும், மற்ற 2 பேர் மனரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த தற்கொலை வழக்கு குலசேகரம் போலீசாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

இந்தநிலையில் சிறையில் இருக்கும் பேராசிரியர் பரமசிவமை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவி பிரீத்தி தற்போது தலைமறைவாகியுள்ளார். மேலும் முன்ஜாமீன் பெற்றுள்ள மாணவர் ஹரீஸின் முன்ஜாமினை ரத்து செய்யும் வகையில் கோர்ட்டை நாட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.


Next Story