ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் - சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சென்னை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆஜராக நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக உள்ள செல்வகுமார் என்பவர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கோரி 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அவர் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி தரப்பு வக்கீல், "2013-14-ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் மனுதாரர் பெயர் இருந்தது. அந்த பட்டியலில் இருந்த 22 பேருக்கு அதே ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கவில்லை" என்று கூறினார்.
இதையடுத்து, 2013-ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 400 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்படவில்லை என மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், "தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் 400 காலியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வேதனைக்குரியது" என்றனர்.
பின்னர், "சென்னை மாநகராட்சி சார்பில் எத்தனை பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன? அதில், அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன? அதில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன?
கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பதற்கு வருகிற 26-ந்தேதி மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும்" என்று எச்சரித்து, உத்தரவிட்டனர்.