பெண் பத்திரிகையாளர் புகாரில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கோர்ட்டு மறுப்பு


சவுக்கு சங்கருக்கு நீதிமன்றக் காவல்,
x
தினத்தந்தி 11 May 2024 2:03 AM GMT (Updated: 11 May 2024 3:43 AM GMT)

சி.எம்.டி.ஏ. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கரை 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது

சென்னை,

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியதாகவும், பெண் போலீசாரை இழிவாக பேசியதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் அளிக்கப்பட்ட 2 புகாரில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் எனக்கோரி அவரை கோவை சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் நேற்று இரவு 7 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சவுக்கு சங்கர் மீதான புகாரை பரிசீலித்த நீதிபதி, இரு வழக்குகளில் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க போதுமான காரணங்கள் இல்லை எனக்கூறி போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.இந்த மனு மீதான விசாரணையின்போது, 'இனிமேல் யூடியூப்பில் தவறான தகவல்களை வெளியிட மாட்டேன்' என சவுக்கு சங்கர் உத்தரவாதம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சி.எம்.டி.ஏ. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க போலீசார் கேட்டுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற 24-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். முன்னதாக சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வேன் எழும்பூர் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்தபோதும், இரவு 10.15 மணிக்கு கோர்ட்டில் இருந்து வெளியேறிய போதும் வேனை சுற்றி பெண்கள் திரண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்கள் சவுக்கு சங்கர் இருந்த போலீஸ் வேன் மீது துடைப்பம் மற்றும் செருப்பால் தாக்குதல் நடத்தினர். தி.மு.க. வக்கீல்களும் போராட்டம் நடத்தினர்.


Next Story