அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு


அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்ததாகவும், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் முதலில் ரூ.20 லட்சத்தை வாங்கிய அங்கித் திவாரி, 2-வது தடவையாக ரூ.20 லட்சத்தை வாங்கிய போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் கடந்த 80 நாட்களுக்கு மேலாக அவர் மதுரை மத்திய சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில், அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதனால் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார். இதன்மூலம் அங்கித் திவாரிக்கு 6-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story