கொரியர் பார்சலில் போதைப்பொருள் என்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் -போலீசார் எச்சரிக்கை
கொரியர் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செயல்படுவதாகவும், இதுபோல யாரும் தொடர்பு கொண்டால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்கும்படியும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
சமீபகாலமாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, உங்கள் பெயருக்கு கொரியர் பார்சல் ஒன்று வந்துள்ளது, அதில் புலித்தோல்கள், விலை உயர்ந்த நகைகள் மற்றும் சட்டவிரோதமான போதைப்பொருள் இருப்பதாகவும் சொல்வார்கள். இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் உங்களை விசாரிக்க உள்ளார்கள் என்று பயமுறுத்துவார்கள். கான்பரன்ஸ் கால் மூலம் பேசி, உங்களுடன் மும்பை சைபர் கிரைம் போலீசார் பேசுவது போலவும், அதே போன் காலில் பேசுவார்கள். அடுத்து உங்கள் மீது நீதிமன்ற பிடிவாரண்டு உத்தரவு உள்ளது, உடனே மும்பை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று போலியான உத்தரவு நகல்களை உங்களுக்கு அனுப்புவார்கள்.
பண மோசடி
இதை அடுத்து இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பினால், சரி செய்து விடலாம் என்று ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் குறிப்பிட்ட தொகையை அனுப்ப சொல்வார்கள். இதை உண்மை என்று நம்பி, அவர்கள் சொல்லும் தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பி பொதுமக்கள் ஏமாறும் நிலை உள்ளது. இதுபோன்ற தகவல்களை உண்மை என்று நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம், என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகம் காட்டாத மோசடி கும்பல் இதுபோன்ற நூதன செயல்கள் மூலம் பொதுமக்களிடம் பண மோசடி செய்கிறார்கள். இதில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.