ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தேர்தல் முடிவை அறிய 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய தமிழகம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தபோதும், வாக்கு எண்ணிக்கையானது 45 நாட்கள் கழித்து ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, இன்று மதியம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி மார்ச் 10-ந்தேதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 11-ந்தேதி முதல், தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ந்தேதி அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில், 2024-ம் ஆண்டில் இதேபோன்று 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோன்று, கன்னியாகுமரிக்கு உட்பட்ட விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
எனினும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறும் சூழலில், வாக்கு பதிவு நடந்து முடிந்து ஏறக்குறைய 45 நாட்களுக்கு பின்னரே சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் தெரிய வரும்.