கடைகள் ஏலம், வரி விதிப்பு, பெயர் மாற்றம் தொடர்பாக வருவாய் அதிகாரியுடன் கவுன்சிலர்கள் காரசார விவாதம்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
கடைகள் ஏலம், வரி விதிப்பது, பெயர் மாற்றம் தொடர்பாக கவுன்சிலர்கள், வருவாய் அலுவலருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
கடைகள் ஏலம், வரி விதிப்பது, பெயர் மாற்றம் தொடர்பாக கவுன்சிலர்கள், வருவாய் அலுவலருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று மாலை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறு பாலங்கள் கட்டுதல், குடிநீர் குழாய் சீரமைப்பு உள்பட 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.
ஆணையாளர் ஸ்ரீதேவி:- வருவாய் பிரிவில் வரி விதிப்பு உள்ளிட்ட விண்ணப்பங்களுக்கு பணம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம். வணிக வளாகங்களுக்கு குப்பை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த வரியை செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. கொசு மருந்து தற்போது தான் வந்து உள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்படும். பணி ஆணை பெற்று பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீசு வழங்கப்படும்.
சாலைகள் சீரமைப்பு
தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- நகரில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் கூறும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதிகளுக்கு சுகாதார பணிக்கு செல்லும் போது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதிகாரிகளுக்கு பணிகளை பிரித்து கொடுத்து தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் வரி விதிப்பு, பெயர் மாற்றம், வணிக பயன்பாட்டிற்கு மாற்றுதல் தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள், வருவாய் அலுவலர் வெங்கடாச்சலபதியுடன் தொடர்ந்து காரசார விவாதம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கேள்வி கேட்கும் போது, தி.மு.க. கவுன்சிலர் பெருமாள் எழுந்து பேசினார். இதையடுத்து கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தலைவர், ஆணையாளர் பதில் அளிக்க வேண்டும். ஆனால் கவுன்சிலர் தேவையில்லாமல் பேசுவதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.