மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம் எம்.ஜி.ஆர். கூட்ட மன்ற அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் காடுவெட்டி ரவி என்கிற ரவிசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், முருகன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை கணக்காளர் சிவகுருநாதன் வாசித்தார். இதில் ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-
எரவாங்குடி-வங்குடி பள்ளிகளில் குடிநீர் மற்றும் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறார். ஆனால் அதனை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாதது, அதிகாரிகள் பள்ளிகளில் போதியளவு ஆய்வு செய்யாததே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினர். ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு இல்லாத ஒன்றியமாக உருவாக்க அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறையினரை கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தெற்கு ஆயுதகளம் கரைமேட்டு தெருவில் குடிநீரும், சாலை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர். முன்னதாக ஒன்றிய மேலாளர் தாமோதரன் வரவேற்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் நன்றி கூறினார்.