சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது


சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது
x

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

சென்னை,

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும்.

அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்) ஆகிய ஆயுஷ் பட்டப்படிப்புகளுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்பைடையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 878 விண்ணப்பங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 707 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது. பிறகு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணிவரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜனவரி 4-ந் தேதி வரை (டிசம்பர் 31, ஜனவரி 1,2-ந் தேதிகளில் கலந்தாய்வு இல்லை) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வு தொடர்பான விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story