16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம்


16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம்
x

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.

சென்னை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக, கல்லூரி முதல்வர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகளில் கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற பிற துறை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வ அடிப்படையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6 பி-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் https://www.nvsp.in இணையதளம் மற்றும் வாக்காளர் உதவி செயலி (ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப்) மூலமும், வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்பொழுது அவரின் கைபேசியில் உள்ள கருடா செயலி மூலமாவும் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷூ மஹாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜீலானி பாபா, மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story