ஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் சாலையில் விழுந்த கண்டக்டர்


ஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் சாலையில் விழுந்த கண்டக்டர்
x

திருச்சி டவுன் பஸ்சில் கண்டக்டராக புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

திருச்சி,

திருச்சியில் ஓடும் அரசு டவுன் பஸ்சில் இருந்து இருக்கையுடன் சாலையில் விழுந்த கண்டக்டர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகேசன் (வயது 54) பணியாற்றினார். பஸ்சை டிரைவர் பாஸ்கரன் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது, பஸ்சின் பின்பகுதியில் வலதுபுறம் வாசலுக்கு நேராக இருந்த இருக்கையின் நட்டு கழன்று இருந்துள்ளது. அந்த இருக்கையில் கண்டக்டர் உட்கார்ந்து இருந்தார். இந்த நிலையில், அந்த பஸ், கலையரங்கம் தாண்டி மெக்டோனால்ட் சாலையில் உள்ள வளைவில் திரும்பியது. அப்போது, எதிர்பாராத விதமாக நட்டு கழன்று இருந்த இருக்கையுடன் கண்டக்டர் சாலையில் விழுந்தார். இதைப்பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர்.

உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கினார். பின்னர் சாலையில் விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து இருந்த கண்டக்டர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிவிட்டார்.

பின்னர் சாலையில் கிடந்த இருக்கையை பஸ்சில் தூக்கி போட்டு பணிமனைக்கு சென்றார். இருக்கை சாலையில் விழுந்த போது, அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story