கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு அடைந்ததாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் எழிலரசி (வயது 24) இவருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு திருமணம் நடந்தது. கடந்த மாதம் 27-ந் தேதி கர்ப்பிணியான எழிலரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை மத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். மறுநாள் பிரசவ வலியால் அவதிப்பட்ட எழிலரசிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். ஏழிலரசிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
2 நாட்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த ஏழிலரசி 30-ந் தேதி டிஸ்சார்ஜ் செய்து பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏழிலரசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஏழிலரசியை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஏழிலரசியை பரிசோதித்த டாக்டர்கள் அவரது பிறப்புறுப்பு சேதம் அடைத்திருப்பதாகவும், பிரசவம் பார்த்த இடத்திலேயே சிகிச்சை பார்க்கும்படி டாக்டர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழிலரசியின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஏழிலரசியின் உடல்நிலை பாதிப்பிற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி நர்சுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரசு டாக்டர் மகாலட்சுமி ஏழிலரசியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள எழிலரசிக்கு சென்னையில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அதனை உறவினர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.