வயது வந்தோருக்கான திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதாக புகார் - மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு


வயது வந்தோருக்கான திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதாக புகார் - மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
x

திரையரங்கில் வெளியாகும் படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலையில், எப்படி தடுப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை,

பல திரையரங்குகளில் வயது வந்தோருக்கு மட்டுமான 'ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை திரையிடும் போது, அங்கு சிறுவர்களையும் அனுமதிப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய தணிக்கை வாரியத்தின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக கடைப்பிடிக்கும்படி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கார்ட்டூன் படங்களைக் கூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக் கூடாது என விதி உள்ளதாகவும், ஆனால் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிலையில், எப்படி தடுப்பது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story